தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

புதன், 12 நவம்பர், 2025

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நவம்பர் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று, அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. ஒன்பதாம் நாளான இன்று (நவம்பர் 13) முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்பாள் எழுந்தருளி, தேரோட்டம் நடைபெற்றது.
தேரை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார், செல்வசித்ரா, அறிவழகன் உள்ளிட்ட பலர், மேலும் தொழிலதிபர்கள் டி.ஏ. தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகரன், கே.ஏ.பி. சீனிவாசன், ஓ.எம். முருகன் யாதவ், முருக இசக்கி, மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ்குமார், பிஜேபி ஓபிசி அணி மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் ரத வீதியில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளைச் சுற்றி மீண்டும் நிலைக்கு வந்தது. இதன் போது கரகாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய மேள தாளங்கள் இடம்பெற்று விழா பண்டிகைச் சூழலை உருவாக்கின. பக்தர்களுக்காக ஸ்ரீ ஜலதுர்கா வார வழிபாடு டிரஸ்ட் மற்றும் அழகர் ஜுவல்லர்ஸ் சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டு, சைவ வேளாளர் மண்டபத்தில் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் மகளிர் அறக்கட்டளை சார்பில் சங்கரி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகள் சிவன் கோயில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சண்முகம் ஆகியோரால் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் நவம்பர் 15 (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகத்தினரால் தீவிரமாக செய்து வரப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad