மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலயத்தில், 106வது ஆண்டு வைகாசி மாத தீமிதி திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதன் பின்னர் தினமும் மகாபாரத சொற்பொழிவுகள் ஆலயத்தில் நடைபெற்றன.
15ஆம் நாள் உற்சவமாக தீமிதி விழா நேற்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று (16ஆம் நாள்) திரௌபதி அம்மன் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கபட்டு ஊஞ்சலில் எழுந்தருளினார். பக்தர்கள் நேரில் தரிசனம் செய்தும், இசை மற்றும் வாசக ஒலியில் மகிழ்ச்சியுடன் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று கலாசார அழகை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியில், நாட்டியத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசாக கேடயங்கள் வழங்கப்பட்டன.
பெருமளவு பொதுமக்கள் திரண்டிருந்த இந்த நிகழ்ச்சி, பக்தி மற்றும் பண்பாட்டு விழாவாகவே திகழ்ந்தது. நிகழ்வின் அனைத்து ஏற்பாடுகளும் திரௌபதி அம்மன் ஆலய நிர்வாக குழுவினரால் சிறப்பாக நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக