சேப்பாக் சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி! - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

செவ்வாய், 17 ஜூன், 2025

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!

சேலம், ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரில் இன்று நடைபெற்ற 'எல் கிளாசிகோ' என வர்ணிக்கப்படும் பரபரப்பான லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கேப்டன் பாபா அபராஜித் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.
38 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் குவித்து, தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, விஜய் சங்கர் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டத்திற்கு வேகம் கூட்டினார்.கடைசி கட்டத்தில் களமிறங்கிய சுனில் கிருஷ்ணா 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 32 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 180 ரன்களை எட்ட உதவினார். தினேஷ் ராஜ் 6 பந்துகளில் 13 ரன்கள் (1 சிக்ஸர்) குவித்து அதிரடியாக முடித்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சில், வருண் சக்கரவர்த்தி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
181 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு பாபா இந்திரஜித் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பாபா இந்திரஜித் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல கடுமையாகப் போராடினார். மறுமுனையில், ரவிச்சந்திரன் அஸ்வின் 46 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் அடித்து, இந்திரஜித்துக்கு நல்ல பார்ட்னர்ஷீப்பை கொடுத்தார்.
ஆனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோகேஷ் ராஜ், தனது அபாரமான பந்துவீச்சால் திண்டுக்கல் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தின் போக்கையே மாற்றிய லோகேஷ் ராஜ், வெறும் 13 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அபிஷேக் தன்வார் தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகளையும், எம். சிலம்பரசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அணிக்கு பக்கபலமாக இருந்தனர்.
பரபரப்பான முடிவு: 
கடைசி இரண்டு ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ரன் தேவை அதிகரிக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தை சமாளித்து துல்லியமாக பந்துவீசினர்.
பாபா இந்திரஜித் மற்றும் அஸ்வின் வெளியேறிய பிறகு, ஷிவம் சிங் (14 பந்துகளில் 13 ரன்கள்) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்தார். இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த த்ரில் வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடர்கிறது. லோகேஷ் ராஜின் மிரட்டலான பந்துவீச்சு, இந்த ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
"காயத்திலிருந்து மீண்டு வந்ததற்கு கிடைத்த வெற்றி இது.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" - என ஆட்ட நாயகன் லோகேஷ் ராஜ் செய்தியாளர்களிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad